Wednesday 11 September 2013

சிற்பக்கலை ஆய்வு - ஓர் அறிமுகம்




சிற்பக்கலை ஆய்வு - ஓர் அறிமுகம்
ச. கமலக்கண்ணன்
கோயிலாய்வு என்பதை மூன்று பிரிவுகளாகப் பிரித்துக் கொள்ளலாம். ஒரு கோயிலிலுள்ள கட்டடக்கலை, கல்வெட்டு மற்றும் சிற்பம் ஆகிய இந்த மூன்றையும் விரிவாக ஆய்வுக்குட்படுத்தினாலே 90% ஆய்வு முடிந்து விட்டதாக அர்த்தம். மீதி 10% அக்கோயிலுடன் தொடர்புடைய மற்ற கோயில்களின் மீதான ஆய்வாகும். வரலாறு.காமில் இதுவரை கட்டடக்கலை மற்றும் கல்வெட்டு ஆய்வுகளைப் பற்றிப் பார்த்தோம். இந்த இதழ் முதல் சிற்பக்கலையைப் பற்றியும் தொடங்குவோம். தொடராக அல்ல. தேவைப்படும்போது தனிக்கட்டுரைகளாக. அதற்கான ஒரு அறிமுகமே இக்கட்டுரை. முனைவர் இரா.கலைக்கோவன் மற்றும் முனைவர் மு.நளினி ஆகியோரின் வழிகாட்டலில் நவம்பர் 2003ம் ஆண்டு புதுக்கோட்டை கீரனூர் அருகிலுள்ள விசலூரில் தொடங்கிய எங்கள் வரலாற்றாய்வுப் பயணத்தில் நாங்கள் கற்றுக்கொண்ட சிற்பம் தொடர்பான தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

சிற்பங்கள் பெரும்பாலும் புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் தொடர்புடையனவாகவே இருக்கும். எனவே, சிற்ப ஆய்வுக்குப் புராணப் பின்புலம் அவசியம். தமிழ்நாட்டில் சிற்பக்கலை வளர்ச்சி என்பது கட்டடக்கலையைப் போலவே கலையை நேசித்த ஒவ்வொரு மன்னர் காலத்திலும் வளர்ந்து வந்துள்ளது. சங்க காலத்தில் ஓவியங்களாக இருந்தவை, முதலாம் மகேந்திரர் குடைவரைகளை எடுப்பிக்கத் துவங்கியபொழுது வாயிற்காவலர்களாக அவதாரம் எடுத்தன. அதன் பின்னர் இராஜசிம்மர் காலத்தில் கருவறைப் பின்சுவரில் இருக்கும் சோமாஸ்கந்தர் சிற்பத்தொகுதியாகப் பரிணமித்தது. அதே இராஜசிம்மர் எழுப்பிய மாமல்லைக் கோயில்களிலும் கச்சிப்பேட்டுப் பெரிய திருக்கற்றளியிலும் கோட்டச் சிற்பங்களாகப் பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை எட்டின. ஆளுயரச் சிலைகளாக இருந்தவை, முதலாம் பராந்தகர் காலத்தில் உணர்ச்சிகள் குன்றாமல் உள்ளங்கையகலச் சிறு சிற்பத்தொகுதிக்குள் அடங்கின. பின்னர் முதலாம் இராஜராஜர் தொடர் சிற்பங்களாகப் புராண நிகழ்வுகளைக் காட்டும் சிற்பத்தொகுதிகளை அறிமுகப்படுத்தினார். இரண்டாம் இராஜராஜர் முந்தைய இரண்டு பாணிகளையும் கலந்து தாராசுரத்தில் பெரியபுராணக் காட்சிகளை வடித்து சிற்பக்கலையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றார். அதன் பின்னர் வந்த நாயக்கர் காலத்தில் சிற்பங்கள் எதுவும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைப் பெறவில்லை.

ஒவ்வொரு கோயிலிலும் எந்தெந்தெச் சிற்பங்கள் எங்கெங்கு அமையவேண்டும் என ஆகம விதிகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் கோயிலின் அளவையும், ஒவ்வொரு சுவரிலும் உள்ள கோட்டங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தும் இவ்விதிகள் மரபுக்குட்பட்டு மீறப்பட்டிருக்கும். உதாரணமாக, ஒரு சிவாலயத்தில் கருவறையின் தென்புறச்சுவரில் தட்சிணாமூர்த்தியும், மேற்கில் லிங்கோத்பவரும், வடக்கில் பிரம்மாவும் இருப்பது வழக்கம். ஆனால் தஞ்சை இராஜராஜீசுவரத்தில் இவ்விதிகள் பின்பற்றப்பட்டிருக்காது. ஏனென்று காரணம் தெரியவில்லை. சாந்தாரநாழியிலுள்ள ஓவியங்களில் தட்சிணாமூர்த்தி இடம்பெற்று விட்டதாலும் மேற்றளங்களில் உள்ளதாலும் சிற்பமாக வடிக்கவில்லை என்பது ஒரு சில அறிஞர்களின் கருத்து. தெற்கிலுள்ள தட்சிணாமூர்த்தி ஆலயம் பின்னாளில் இணைக்கப்பட்டது.

ஒவ்வொரு சிற்பத்தையும் வகைப்படுத்த அல்லது அடையாளப்படுத்த அவற்றின் மகுடம், ஆடை அணிகலன்கள், தரித்திருக்கும் ஆயுதங்கள், கைகள் காட்டும் முத்திரைகள் மற்றும் உடல், கால், பாத நிலைகள் ஆகியவையே உதவும். ஒரு சிற்பம் எந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தது என்பதை அறிய அவற்றின் முகபாவங்கள், உடலமைப்பு ஆகியவை உதவும். இதற்குப் பல காலகட்டங்களைச் சேர்ந்த சிற்பங்களை நேரில் காணவேண்டும். வார்த்தைகளில் விவரிப்பது கடினம். ஆகவே இதை இப்போதைக்கு விட்டுவிடுவோம். தமிழ்நாட்டிலிருக்கும் பல்லவர் மற்றும் சோழர் காலச் சிற்பங்களில் பரவலாகக் காணப்படும் ஆடை அணிகலன்கள், ஆயுதங்கள், முத்திரைகள் மற்றும் உடல், கால், பாத நிலைகளை மட்டும் இக்கட்டுரையில் காண்போம்.

மகுடங்கள்

தமிழ்நாட்டுச் சிற்பங்களில் பொதுவாக மூன்று வகை மகுடங்களே காணப்படுகின்றன.

1.
சடைமகுடம்
2.
கிரீடமகுடம்
3.
கரண்டமகுடம்

சடைமகுடம் கொண்டிருக்கும் கடவுள்கள் சிவபெருமானும் பிரம்மாவும் மட்டுமே. அல்லது சிவனின் அம்சங்களான சூலதேவர், வீரபத்திரர் முதலானவர்கள் கொண்டிருக்கலாம். முனிவர்களாகவும் இருக்கலாம். கிரீடமகுடம் விஷ்ணு மற்றும் அரசர்களுக்கு மட்டுமே இருக்கும். இரண்டு கைகளுடன் கிரீடமகுடம் கொண்டிருந்தால் ஏதாவது அரசராக இருக்கும். எ-கா. அத்யந்தகாமத்திலுள்ள பல்லவ அரசர். இரண்டுக்கு மேற்பட்ட கைகளாக இருந்தால் விஷ்ணு அல்லது அவரது அம்சமாக இருக்கும். மற்ற அனைத்து உருவங்களும் கரண்டமகுடத்தையே கொண்டிருக்கும். கரண்ட மகுடம் என்பது சடைமகுடம் போலவே, ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட அடுக்குகளைக் கொண்டிருக்கும். உதாரணமாக, வினாயகருக்கு இருப்பது போல.

ஆடைகள்

இறைத்திருமேனிகள் அணிந்திருக்கும் ஆடைகளில் பலவிதங்கள் உள்ளன. தோலாடை, மரவுரியாடை, பட்டாடை, பஞ்சாடை என்பன கீழாடைகள். இடைக்கட்டு தொடைகளின் நடுவே அமையும். பெண் சிற்பங்களுக்கு மார்புக்கச்சு உண்டு. பெண் சிற்பங்களில் மார்புக்கச்சை தெய்வங்களைக் குறிக்கப் பயன்படும். மார்புக்கச்சை இல்லாமலிருந்தால் சாதாரண மனிதர்கள் எனவும் கச்சையுடன் இருந்தால் இறை எனவும் கொள்ளலாம். உதாரணமாக, மகாவிஷ்ணு இருபுறமும் இரு பெண்களுடன் இருந்தால், மார்புக்கச்சை உடையவர் திருமகள் எனவும் கச்சையில்லாதவர் பெருநிலச்செல்வி எனவும் அடையாளப்படுத்தலாம். சில நேரங்களில் பெண் தெய்வங்கள் சிலவும் கச்சின்றிருக்கலாம். எ-கா. சாமுண்டி மற்றும் உமை. அம்மையப்பர் சிற்பங்களில் தோலாடை இருக்கும் பகுதி சிவனுக்கும் பட்டாடை இருக்கும் பகுதி சக்திக்கும் உரியதாக இருக்கும்.

அணிகலன்கள்

உச்சி முதல் பாதம் வரை பல்வேறு விதமான அணிகலன்களைக் காட்டியுள்ளனர் பல்லவ மற்றும் சோழச் சிற்பிகள். காதுகளிலுள்ள குண்டலங்கள், கழுத்தணிகள், தோள்வளைகள், கைவளைகள், இடைக்கச்சு மற்றும் கால்வளைகள் ஆகியவையே முக்கியமானவையாகும். குண்டலங்களில் மகரகுண்டலம், பனையோலைக்குண்டலம், பிணக்குண்டலம், ஆந்தைக்குண்டலம், பூட்டுக்குண்டலம் ஆகியவையே பொதுவாகக் காணப்படுவனவாகும். சிவபெருமான் ஒரு காதில் மகரகுண்டலமும் மற்றொரு காதில் பனையோலைக்குண்டலம் கொண்டிருப்பார். மற்ற உருவங்கள் பொதுவாகப் பனையோலைக்குண்டலங்களையே கொண்டிருக்கும். ஆந்தைக்குண்டலத்தை வாயிற்காவலர்களும் பூட்டுக்குண்டலத்தைப் பெண்சிற்பங்களும் கொண்டிருப்பர். பிணக்குண்டலம் கொண்டிருப்பவர் காளி மட்டுமே. அதிலும் திருவலஞ்சுழியிலுள்ள ஏகவீரி பிடாரி உயிருள்ள மனிதனையே குண்டலமாகக் கொண்டுள்ளார். கழுத்தணிகளிலும் முத்துமாலை, சரப்பளி, சவடி எனப்பலவகைகள் உள்ளன. இடைவெளியின்றி முத்துக்கள் கோக்கப்பட்டிருக்கும் முத்துமாலை பெண்சிற்பங்களிலும் பட்டையாகக் காசுமாலை போன்ற சரப்பளியும் நடுவில் ஒரேயொரு உருத்திராட்சக் கொட்டையுடன் இருக்கும் சவடியும் ஆண்சிற்பங்களிலும் காணப்படும். ஆண்கள் அணியும் முப்புரிநூல் இப்போது அணிவது போல் நூலாக இல்லாமல், துணியை முடிந்து வைத்தது போலப் பெரிதாக இருக்கும். இதையும் உபவீதம், நிவிதம் என இருவகைகளாகப் பிரிக்கலாம். இடது தோளிலிருந்து கீழிறங்கும் முப்புரிநூல் வலது கையின் மேலாக இருந்தால் அது நிவிதம். வலது கைக்கடியில் இருந்தால் அது உபவீதம். உதரபந்தம் என்பது வயிற்றைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கும். கால்வளைகளில் தாள்செறி, சிலம்பு எனப் பல்வேறு வகைகள் உள்ளன.

ஆயுதங்கள்

ஒவ்வொரு கடவுளும் அந்தந்தப் புராண நிகழ்வுக்கேற்ப ஆயுதங்களைத் தரித்திருக்கும். சிவபெருமான் ஒரு கையில் மானும் மறுகையில் மழுவும் வைத்திருப்பார். விஷ்ணு சங்கு சக்கரத்தையும் பிரம்மா அக்கமாலை மற்றும் கமண்டலத்தையும் வைத்திருப்பர். சூலதேவர் தலைக்குப் பின்னால் சூலமும், கங்காளரின் கையில் கங்காளத்தண்டும் இருக்கும். வாயிற்காவலர்கள் உருள்பெருந்தடியை வைத்திருப்பர். சிலசமயம் இத்தடியைப் பாம்பு சுற்றியோ, முனையில் மழுவுடனோ அல்லது இரண்டும் சேர்ந்தோ இருக்கும். சிவபெருமானுக்குரிய சடைமகுடத்துடன் உள்ள ஒரு சிற்பம் கையில் வில்லுடன் இருந்தால் திரிபுராந்தகர் எனக்கொள்ளலாம்.

முத்திரைகள்

ஒவ்வொரு சிற்பமும் கைகளையும் விரல்களையும் வைத்திருக்கும் முறையைக் கொண்டு பல்வேறு விதமான முத்திரைகளைச் சிற்பிகள் விளக்கியுள்ளனர். கையைத் தொடைமீது இருத்தியிருந்தால் கடியவலம்பிதம். இடுப்பில் இருந்தால் கடி. நடராஜரின் இடமுன்கை யானையின் துதிக்கை போலிருப்பதால் வேழமுத்திரை. வலமுன்கை அபயமளிப்பது போலிருப்பதால் காப்புமுத்திரை. தட்சிணாமூர்த்தியின் இடமுன்கையில் சுவடியிருப்பதால் அதைத் தாங்கிக்கொள்ள ஏதுவாகக் கடகமுத்திரை. விஷ்ணு தன் கையிலுள்ள சக்கரத்தைத் தாங்கிப்பிடிக்கக் கர்த்தரி முத்திரையில் வைத்திருப்பார். தஞ்சை இராஜராஜீசுவரத்திலுள்ள வாயிற்காவலர் ஒருவர் உள்ளே வருவோரை எச்சரிக்கும் முகமாக ஆள்காட்டிவிரலை உயர்த்தியபடி இருப்பார். அது தர்ஜனி முத்திரை ஆகும். கீழே தொங்கவிட்டுக் கொண்டிருந்தால் டோலம் அல்லது நெகிழ்கை. ஆக, இம்முத்திரைகள் அழகூட்ட மட்டுமின்றிப் பயன்பாட்டுடனும் கூடியதாக இருக்கும்.

உடல், கால், பாத நிலைகள்

பெரும்பாலான சிற்பங்கள் பொதுவாக நிற்கும் நிலையில் அல்லது அமர்நிலையில்தான் காட்டப்பட்டுள்ளன. நிற்கும் நிலைக்கு, பாத அமைப்பும் கால் நிலையும் அடிப்படையானவை. கால்நிலைகள் சமம், ஸ்வஸ்திகம், மண்டலம், ஆலிடம் எனப்பலவகையின. அத்யந்தகாமத்திலிருக்கும் நந்தியணுக்கர் நந்தியின் தலைமீது கைகளை ஊன்ற ஏதுவாக ஸ்வஸ்திகம் பயன்பட்டுள்ளது. ஒரு காலை நேராக நிறுத்தி மற்றொரு காலைக் குறுக்காக அதன் முன் அல்லது பின் வைத்தால் அது ஸ்வஸ்திகமாகும். அவ்வாறு ஸ்வஸ்திகமாக வைத்துள்ள காலின் பெருவிரல் மட்டும் தரையைத் தொட்டுக் கொண்டிருந்தால் அது சூச்சி. விரல்கள் அனைத்தும் தொட்டால் அக்ரதலசஞ்சாரமாகும். இரு கால்களையும் நேராக நிறுத்திப் பாதங்கள் நேராக இருந்தால் சமம் எனவும், ஒரு பாதம் சற்றுத் திரும்பியிருந்தால் திரயச்ரம் எனவும் சமமாக உள்ள பாதத்துக்குச் செங்குத்தாகத் திரும்பியிருந்தால் பார்சுவம் எனவும் கூறுவோம்.

மேலே கூறியவற்றை ஒன்றாகத் தொகுத்து அத்யந்தகாமத்திலுள்ள அம்மையப்பரை முனைவர் இரா. கலைக்கோவன் அவர்கள் எவ்விதம் விளக்கியுள்ளார் என்பதைக் காணலாம்.

***


தமிழ்நாட்டுக் கலைவரலாற்றின் முதல் அம்மையப்பராக உருவெடுத்துள்ள இவ்வடிவத்தின் வலப்புறம் சிவபெருமானும் இடப்புறம் உமையும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். சிவப்பாதியின் கம்பீரமும் உமைப்பாதியின் நளினமும் முதல் நோக்கிலேயே பதியுமாறு உடல் வளைவுகளைச் செதுக்கியுள்ள பல்லவச் சிற்பாசிரியர்களின் உளித்திறம் வியக்காதிருக்க முடியவில்லை. சமபாத நிலையில் நிற்கும் அம்மையப்பரின் வலக்கைகளுள் முன்கை காக்கும் குறிப்புக் காட்டப் பின்கையில் மழு. அம்மையின் இடக்கைகளில் முன்கை டோலமாய் நெகிழ்ந்துள்ளது. பின்கையில் மலர். வலச்செவியில் பூட்டுக்குண்டலமும் செவிப்பூவுமிருக்க, இடச்செவியில் பனையோலைக் குண்டலம் அணிந்துள்ள அம்மையப்பரின் மகுடம், வலப்புறம் சடைமகுடமாகவும் இடப்புறம் கரண்டமகுடமாகவும் அமைந்துள்ளது.

உமைப்பாதியில் அழகிய இளமை நலம் பொருந்திய எடுப்பான மார்பகம். அம்மார்பகத்தைத் தொட்டவாறு தவழும் ஆமைப்பதக்கத்தோடு அகலமான ஆரமொன்றும், கழுத்தோடு ஒட்டிய நிலையில் மற்றோர் ஆரமும் அம்மையப்பரை அலங்கரித்தாலும், மேல் ஆரம் உமைக்கு மட்டுமே செதுக்கப்பட்டுள்ளது. உமைத்தோளில் முடிக்குழல்கள் நெகிழ்ந்துள்ளன. சிவத்தோளில் சடைப்புரிகள். இறைவன் கைகளில் வளைகள். உமையின் முன்கையில் வளைகளுக்கான பகுதி ஒதுக்கீடாக உள்ளது. பின்கையில் மணிக்கட்டிலிருந்து முழங்கைக்குச் சற்றுக் கீழ்வரை ஒன்றோடொன்று நெருக்கமான நிலையில் ஒன்பது வளைகள் பூணப்பட்டுள்ளன. காலில் சிலம்பு.

அம்மையப்பரின் இடையில் அரைப்பட்டிகை இறுக்கும் சிற்றாடை. பட்டிகையின் முடிச்சுத் தொங்கல்கள் வலத்தொடையில் நெகிழ்ந்துள்ளன. இடைக்கட்டின் முடிச்சுத் தொங்கல்கள் பக்கவாட்டில் கணுக்கால்களுக்குச் சற்று மேல்வரையிலெனக் காட்டப்பட்டுள்ளன. படமெடுத்தபடி வளைந்து, தலையை மேலுயர்த்திப் பார்க்கும் பாம்பின் வால்பகுதியும் வலப்புறமே உள்ளது. இறைவிப்பாதியின் இடுப்பு நிமிர்வும் இடைவளைவும் இளகி இலேசாய்த் தாழ்ந்த தோளும் பெண்மையின் மென்மையைக் கண்முன் நிறுத்துகின்றன. கலைநயம் கைவிரல் நுனிகளில் இருந்தாலொழிய இத்தகு சித்திரபேதம் இயலுவதா என்ன!

***

சிற்பக்கலையில் மேலே குறிப்பிட்டிருப்பவை மட்டுமின்றி இன்னும் ஏராளமான கூறுகள் உள்ளன. இது தொடர்பான நூல்களைப் படித்தும் கள ஆய்வுகளை மேற்கொண்டும் இன்னும் பல தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். இதை இன்னும் ஆழமாகத் தெரிந்து கொள்ள விழைவோர்க்கு http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=253

No comments:

Post a Comment