Wednesday 11 September 2013

சிற்ப வரலாறு



                        சிற்பம் அமைக்கும் பொருள்கள்
 மெழுகு, அரக்கு, சுதை, மரம், தந்தம், கல், பஞ்சலோகம்
முதலியவைகளினால் சிற்பஉருவங்கள் அமைக்கப்படுகின்றன.
 
    ‘‘கல்லும் உலோகமும் செங்கலும் மரமும்
    மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும்
    கண்ட சருக்கரையும் மெழுகும் என்றிவை
    பத்தே சிற்பத் தொழிற்குறுப் பாவன’’

என்பது திவாகர நிகண்டு1

‘‘வழுவறு மரனும் மண்ணும் கல்லும்
       எழுதிய பாவையும்....’’
  
என்றும்,
  
         ‘‘மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும்
         கண்ணிய தெய்வதம் காட்டுநர் வகுக்க’’
  
என்றும் மணிமேகலைக் காவியம் கூறுகிறது.1
  
         நமது கோயில்களிலே சிற்பக் கலை பெரிதும் இடம்
பெற்றிருக்கிறது. சிற்பஉருவங்கள் அமையாத கோயிற் கட்டடங்கள் இல்லை
என்று கூறலாம். கோயிலின் தரை, சுவர், சிகரம், கோபுரம், மண்டபம்,
தூண்கள், வாயில் நிலைகள் முதலிய கட்டடங்களின் எல்லா இடங்களிலும்
சிற்ப உருவங்கள் அமைந்துள்ளன.
  
         காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த மாளிகைகளிலே, சுதையினால்
செய்யப்பட்ட சிற்பஉருவங்கள் அமைக்கப்பட்டிருந்ததை, இந்திர
விழாவின்போது அந்நகரத்துக்கு வந்த மக்கள் கண்டு களித்தனர் என்று
மணிமேகலை என்னும் நூல் கூறுகிறது. அப்பகுதி இது:
  
       ‘‘வம்ப மாக்கள் கம்பலை மூதூர்
       சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனைதொறும்
       மையறு படிவத்து வானவர் முதலா
       எவ்வகை உயிர்களும் உவமங் காட்டி
       வெண்சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய
       கண்கவர் ஓவியங் கண்டு நிற்குநரும்.’’2

இரண்டு வகைச் சிற்பம்

     சிற்ப உருவங்களை முழு உருவங்கள் என்றும் புடைப்புச்
சிற்பங்கள் என்றும் இரண்டு விதமாகப் பிரிக்கலாம். முழு உருவச் சிற்பம்
என்பது, பொருள்களின் முன்புறம், பின்புறம் முதலிய முழு உருவமும்
தெரிய அமைக்கப்படுவது. புடைப்புச் சிற்பம்1 என்பது. பொருள்களின்
ஒருபுறம் மட்டும் தெரியும்படி சுவர்களிலும் பலகைகளிலும்
அமைக்கப்படுவது. இவ்விரண்டுவிதச் சிற்ப உருவங்களும் கோயில்களிலே
அமைக்கப்படுகின்றன.

தத்ரூப உருவங்கள்

     தமிழ் நாட்டுச் சிற்பக் கலை, பாரத நாட்டுச் சிற்பக் கலையைப்
போலவே, சமயத்தை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சி பெற்றிருக்கிறது
ஆகவே, தெய்வ உருவங்கள் நமது நாட்டுச் சிற்பக் கலையில் பெரிதும்
முதன்மை பெற்றுள்ளன. கிரேக்க தேசம், உரோமாபுரி முதலிய
மேல்நாடுகளிலே மனித தத்ரூப சிற்ப உருவங்கள்2 சிறப்பாக வளர்ச்சி
பெற்றதுபோல நமது நாட்டில் மனித தத்ரூப சிற்பக் கலை (ஓரளவு பயிலப்
பட்டதே யல்லாமல்) முழு வளர்ச்சி யடையவில்லை. இதன் காரணம்,
நம்மவர் தத்ரூப  உருவங்களைச் செய்து வைக்கும் வழக்கத்தை அதிகமாகக்
கொள்ளாததுதான். ஆனால், நமது நாட்டில கற்பனை உருவச் சிற்பங்கள்
பெரிதும் வளர்ந்திருக்கின்றன.

கல்லும் உலோகமும்
    
        நமது நாட்டுச் சிற்பக் கலை சமயத்தை அடிப்படையாகக் கொண்டு
வளர்ச்சி பெற்றது என்று கூறினோம். சைவ, வைணவச் சிற்ப உருவங்களை
ஆதிகாலத்தில் மரத்தினாலும், சுதையினாலும், பஞ்சலோகத்தினாலும் செய்து
அமைத்தார்கள். இப்போதுங் கூட மரத்தினாலும் சுதையினாலும்
செய்யப்பட்ட தெய்வ உருவங்கள் சில கோயில்களில் உள்ளன. உதாரணமாக,
உத்தரமேரூர் சுந்தர வரதப் பெருமாள் கோயிலிலுள்ள தெய்வ உருவங்கள்
மரத்தினால் செய்யப்பட்டவையே. திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்
பெருமாள், காஞ்சி பாண்டவ தூதப் பெருமாள்,மகாபலிபுரத்துத் தலசயனப்
பெருமாள், திருவிடந்தை வராகப் பெருமாள் முதலிய
கோயில்களில உள்ள உருவங்கள் சுதையினால் ஆனவையே.

     கருங்கல்லினாலும் பஞ்சலோகத்தினாலும் சிற்ப உருவங்கள்
உண்டாக்கப்பட்டது கி. பி. 7ஆம் நூற்றாண்டிலே ஆகும். பல்லவ அரசரும்
பிற்காலச் சோழரும் இவற்றினால் சிற்பங்களை அமைத்தார்கள்.

     சிவன், திருமால் முதலிய தெய்வ உருவங்கள் மனித உருவமாகக்
கற்பிக்கப்பட்டு, மனித உருவம் போலவே செய்யப்படுகின்றன. ஆனால்,
அந்த உருவங்கள் எலும்பு, சதை, நரம்பு முதலியவை அமைந்த, மானிட
உறுப்புள்ள1 தெய்வ உருவங்களாக அமைக்கப்படுவதில்லை.

யவன நாட்டுச் சிற்பமும் நமது நாட்டுச் சிற்பமும்

     அயல் நாட்டுத் தெய்வச் சிற்ப உருவங்களுக்கும் நமது நாட்டுத்
தெய்வச் சிற்ப உருவங்களுக்கும் உள்ள வேற்றுமைகளை இந்நூலாசிரியர்
எழுதியுள்ள ‘‘இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்’’ என்னும் நூலில்
எழுதியிருப்பதை இங்குக் கூறுவது பொருந்தும். அது:

     ‘‘அயல்நாட்டுச் சிற்பங்கள், உருவங்கள் உள்ளது உள்ளவாறே,
கண்ணுக்குத் தோன்றுகிறபடியே
அமைக்கப்படுவன; நமது நாட்டுச் சிற்பங்கள், உள்ளதை உள்ளபடியே
காட்டும் நோக்கமுடையனவல்ல; சிற்ப உருவங்களின் மூலமாக ஏதேனும்
கருத்தை அல்லது உணர்ச்சியைக் காட்டும் நோக்கம் உடையன. இயற்கை
உருவத்தை உள்ளது உள்ளபடியே விளக்குவது அயல்நாட்டுச் சிற்பம்;
உணர்ச்சிகளையும் கருத்துகளையும் காட்டுவதற்குக் கருவியாக உள்ளது நமது
நாட்டுச் சிற்பம். மனித உருவத்தின் அழகையும் செவ்வியையும்
சிற்பக் கலையில் நன்கு பொருந்தும்படி அக்கலையை மிக உன்னத நிலையில்
வளர்த்து உலகத்திலே பெரும்புகழ் படைத்த கிரேக்க நாட்டுச் சிற்பிகள்,
தமது நாட்டுக் கடவுளர்களின் உருவங்களைச் சிற்ப உருவமாக
அமைத்தபோது, மனித உடலமைப்பு எவ்வளவு அழகாக அமையக்கூடுமோ
அவ்வளவு அழகையும் அமையப் பொருத்தி அத்தெய்வ உருவங்களை
அமைத்தார்கள். அவர்கள் அமைத்த ஜு லியஸ், வீனஸ்
முதலிய கடவுளர்களின் சிற்ப உருவங்களைக் காணும்போது, மானிட உடல்
அமைப்பின் சீரிய இயல்பு அவைகளில் அமையப் பெற்றிருப்பதால்,
உண்மையிலேயே அவை நமது கண்ணையுங் கருத்தையும் கவர்ந்து
மகிழ்ச்சியளிக்கின்றன.

     ‘‘ஆனால் நமது கருத்து அச்சிற்பங்களின் உருவ அமைப்பின்
அழகோடு தங்கி நிற்கிறதே தவிர, அதற்கப்பால் செல்வதில்லை. அவை,
மக்கள் நிலைக்கு மேம்பட்ட கடவுளின் உருவங்கள் என்கிற உணர்ச்சியைக்
கூட உண்டாக்குவதில்லை.

    ‘‘நமது நாட்டுச் சிற்ப உருவங்களில் அமைக்கப்பட்ட தெய்வ
உருவங்களோ அத்தகையன அல்ல. நமது நாட்டுச் சிற்ப உருவங்களில்,
கிரேக்கச் சிற்பங்களைப் போன்று, இயற்கையோடு இயைந்து அழகிய
உடலமைப்பு காணப்படாதது உண்மைதான். ஆனால், இச்சிற்பங்களைக்
காணும்போது, நமது உள்ளமும் கருத்தும் இவ்வுருவங்களில் மட்டும்
நின்றுவிடவில்லை; இவ்வுருவங்கள் நமது கருத்தைஎங்கேயோ இழுத்துச் சென்று ஏதேனும் உணர்ச்சிகளையும் கருத்துகளையும்
ஊட்டுகின்றன. ஆகவே, நமது சிற்பங்கள், அயல் நாட்டுச் சிற்பங்களைப்
போன்று, வெறும் அழகிய காட்சிப் பொருள்களாக மட்டும் இல்லாமல்,
காட்சிக்கும் அப்பால் சென்று கருத்துகளையும் உணர்ச்சிகளையும்
ஊட்டுகின்றன. இந்த இயல்பு சிற்பக் கலைக்கு மட்டுமன்று; நமது நாட்டு
ஓவியக் கலைக்கும் பொருந்தும்.
  
         ‘‘எனவே, பொருள்களின் இயற்கை உருவத்தை அப்படியே
காட்டுவது அயல் நாட்டுச் சிற்பக் கலையின் நோக்கம்; உணர்ச்சிகளையும்
கருத்துகளையும் உருவங்கள் மூலமாக வெளிப்படுத்துவது நமது நாட்டுச்
சிற்பக் கலையின் நோக்கம் என்னும் உண்மையை மறவாமல் மனத்திற்
கொள்ளவேண்டும்.’’1
  
சிற்பத்தில் மறைபொருள்கள்
  
         நமது தெய்வத் திருவுருவங்கள் குறிப்புப் பொருளைப்
புலப்படுத்துகின்றவை. (குறிப்புப்பொருள் - Symbolism.) அதாவது,
மறைபொருளாகக் கருத்துகளை வெளிப்படுத்துகின்றவை. உதாரணமாக
ஒன்றைக் காட்டுவோம்.
  
         கடவுள் எங்கும் பரந்து இருக்கிறார் என்பது எல்லாச்
சமயத்தவரின் கொள்கை.உருவம் இல்லாமல் பரந்து இருக்கிற கடவுளைச்
சைவரும் வைணவரும் தமது கடவுள் திருவுருவத்தில் மறைபொருளாக
அமைத்துக் காட்டியிருக்கிறார்கள். அவர்கள் கடவுள் உருவங்களுக்கு நான்கு
கைகள் அல்லது எட்டுக் கைகளை அமைத்துக் காட்டியிருக்கிறார்கள்.
திசைகளை நான்காகவும் எட்டாகவும் கூறுவது மரபு. ஆகையினாலே,
எல்லாத் திசைகளிலும் பரந்து
இருக்கிறவர் கடவுள் என்பதைக் காட்ட, நான்கு கைகளை அல்லது எட்டுக்
கைகளைக் கற்பித்திருக்கிறார்கள். இவ்வாறே, கடவுளின் மற்றக்
குணங்களுக்கும் குறிப்புப்  பொருளைக் கற்பித்துத் தெய்வ உருவங்களை
அமைத்திருக்கிறார்கள். இக்குறிப்புப் பொருள்களை யெல்லாம் விளக்கிக்
கூறுவதற்கு இது இடமன்று; காமிகாகமம் முதலிய நூல்களில் கண்டு
கொள்க; இந்நூலாசிரியர் எழுதியுள்ள ‘‘இறைவன் ஆடிய எழுவகைத்
தாண்டவம்’’ என்னும் நூலிலும் கண்டு கொள்க.

     பண்டைக் காலத்திலே தமிழர் கோயில்களிலே தெய்வத்தை
வழிபட்டபோது, இப்போது வைத்து வணங்கப்படுகிற தெய்வ உருவங்களை
வைத்து வணங்கவில்லை.அந்தந்தத் தெய்வங்களின் அடையாளங்களை
மட்டும் வைத்து வணங்கினார்கள். உதாரணமாக முருகனை வணங்கிய
தமிழர், இப்போது வணங்கப்படுகிற முருகன் உருவத்தை வைத்து
வணங்காமல், முருகனுடைய படையாகிய வேலை மட்டும் வைத்து
வணங்கினார்கள்; இந்திரனுடைய உருவத்தை வைத்து வணங்காமல்
அவனுடைய வச்சிராயுதத்தை வைத்து வணங்கினார்கள்; அல்லது அவனது
வெள்ளை யானை, கற்பகத் தரு இவற்றின் உருவங்களை வைத்து
வணங்கினார்கள். இதைத்தான் வேற்கோட்டம், வச்சிரக் கோட்டம்,
அமரர்தருக் கோட்டம், வெள்ளை யானைக் கோட்டம் என்று சிலப்பதிகாரம்
கூறுகிறது.
    
    இதனால் அறியப்படுவது என்னவென்றால், இப்போது கோயில்களில் வைத்து வணங்கப்படும் தெய்வ உருவங்கள் பண்டைக் காலத்தில் சிற்ப உருவங்களாக அமைக்கப்படவில்லை என்பதும், அவை பிற்காலத்தில் அமைக்கப்பட்டவை என்பதும் ஆகும்.
பல்வகை மூர்த்தங்கள்

     சைவர், சிவபெருமானுடைய திருவுருவத்தைப் பல மூர்த்தங்களாகக்
கற்பித்தார்கள்; வைணவர்களும், திருமாலுடைய திருவுருவத்தைப் பல
மூர்த்தங்களாகக் கற்பித்தார்கள். கடவுளின் பலவித ஆற்றல்களைக்
காட்டுவதற்காகவே இவ்வாறு பல்வேறு மூர்த்தங்களைக் கற்பித்தார்கள்.
கடவுளின் சக்தியை அம்மன், தேவி என்னும் பெயரால் பெண் உருவமாகக்
கற்பித்தார்கள்.

     சிவபெருமானுடைய திருவுருவங்களை இருந்த கோலமாகவும், நின்ற
கோலமாகவும், ஆடுங் கோலமாகவும் கற்பித்தார்கள். திருமால்
திருவுருவங்களை நின்ற கோலமாகவும், இருந்த கோலமாகவும்,
கிடந்த(படுத்த) கோலமாகவும் கற்பித்தார்கள். இதனை நின்றான், இருந்தான்,
கிடந்தான் உருவம் என்பர்.

     மற்றும் கணபதி, முருகன், அம்மன் முதலிய தெய்வ உருவங்களையும்
கற்பித்தார்கள்.
 
பௌத்த, ஜைன சிற்பங்கள்

     நமது நாட்டிலே பண்டைக்காலத்திலே (கி.மு.3ஆம் நூற்றாண்டு முதல்
கி.பி.10ஆம் நூற்றாண்டு வரையில்) பௌத்த மதம் நன்றாகச்
செழித்திருந்தது.1 அக்காலத்தில் பௌத்தராக இருந்த தமிழர்கள், புத்தர்
உருவத்தையும் பௌத்தத் தெய்வ உருவங்களையும் வழிபட்டார்கள்.
அவர்களும் ஆதிகாலத்தில் புத்தர் திருவுருவத்தை வைத்து வணங்காமல்,
பாத பீடிகை, தருமச் சக்கரம் ஆகிய புத்தருடைய
  அடையாளங்களை
வைத்து வணங்கினார்கள். பிறகு புத்தருடைய திருவுருவம் கற்பிக்கப்பட்ட
காலத்தில், அவர்கள் புத்தருடைய உருவத்தை வைத்து வணங்கினார்கள்.


பிறகு புத்தருடைய திருவுருவம் கற்பிக்கப்பட்ட காலத்தில், அவர்கள்
புத்தருடைய உருவத்தை வைத்து வணங்கினார்கள்.

     மணிமேகலை, சிலப்பதிகாரம் என்னும் நூல்கள் புத்தர் வணக்கத்தைக்
கூறும்போது பாதபீடிகையையும் தரும பீடிகையையும் கூறுகின்றன.
ஏனென்றால், அந்தக் காலத்திலே புத்தருடைய உருவம் கற்பிக்கப்பட்டுச்
சிற்பிகளால் சிற்ப உருவங்களாகச் செய்யப்படவில்லை. இதனாலே
மணிமேகலை, சிலப்பதிகாரம் ஆகிய நூல்கள் மிகப் பழமையானவை என்பது
தெரிகிறது.

    புத்தருடைய உருவம் கற்பிக்கப்பட்ட பிற்காலத்திலே அவ்வுருவத்தை
நின்ற கோலமாகவும், இருந்த கோலமாகவும்கிடந்த(படுத்த) கோலமாகவும்
சிற்பிகள் அமைத்தார்கள். வைணவர், திருமால் திருவுருவத்தை இவ்வாறே
மூன்று விதமாக அமைத்ததை மேலே கூறினோம்.

     பௌத்த மதத்தைப்போலவே ஜைன சமயமும் (சமண மதம்) பண்டைக்
காலத்திலே நமது நாட்டிலே சிறப்படைந்திருந்தது. சமண சமயத்தைச் சேர்ந்த
தமிழர், அருகக் கடவுளின் உருவத்தையும் தீர்த்தங்கரர்களின் உருவத்தையும்
வணங்கினார்கள்.

ஒரு செய்தி

     பௌத்த, ஜைன மதத்துக்கும் சைவ, வைணவ சமயத்துக்கும் சிற்ப
உருவ அமைப்பில் உள்ள ஒரு நுட்பமான செய்தியைக் கூற விரும்புகிறேன்.
அது என்னவென்றால்பௌத்தரின் புத்த உருவத்துக்கும் ஜைனரின்
தீர்த்தங்கரர் (அருகர்) உருவங்களுக்கும் இரண்டு கைகள் மட்டும் உண்டு.
ஆனால், அவர்களின் சிறு தெய்வங்களுக்கு நான்கு அல்லது எட்டுக் கைகள்
உள்ளன. இதற்கு நேர்மாறான அமைப்பு சைவ, வைணவ உருவங்களில்
காணப்படுகின்றன. சிவன் அல்லது திருமால் உருவங்களுக்கு
நான்கு அல்லது எட்டுக் கைகள் 
இருக்கின்றன. ஆனால், சைவ, வைணவச் சிறு தெய்வங்களுக்கு இரண்டு
கைகள் மட்டுமே இருக்கின்றன.

     உதாரணமாக, பௌத்தர்களின் சிறு தெய்வமாகிய அவலோகிதர், புத்த
பதவியடையும் நிலையை அடைந்திருந்தாலும், அப்பதவியை இன்னும்
அடையாத படியால், சிறு தெய்வமாகக் கருதப்படுகிறார். ஆகையினாலே,
அவருக்கு நான்கு கைகளைக் கற்பித்திருக்கிறார்கள். அதுபோலவே தாரை
முதலிய சிறு தெய்வங்களுக்கு நான்கு கைகளைக் கற்பித்திருக்கிறார்கள்.
பௌத்தரின் உயர்ந்த தெய்வமாகிய புத்தருக்கு இரண்டு கைகள் மட்டும்
உள்ளன.

     சமணரும் தமது உயர்ந்த தெய்வமாகிய அருகர் அல்லது தீர்த்தங்கரர்
உருவங்களுக்கு இரண்டு கைகளை மட்டும் கற்பித்திருக்கிறார்கள். ஆனால்,
அவர்கள் வணங்கும் இந்திரன், யக்ஷி, ஜு வாலாமாலினி முதலிய சிறு
தெய்வங்களுக்கு நான்கு கைகளைக் கற்பித்துச் சிற்பஉருவங்களை
அமைத்திருக்கிறார்கள்.

     பௌத்த, சமணர்களுக்கு மாறாகச் சைவரும், வைணவரும் தமது
பரம்பொருளான உயர்ந்த கடவுளுக்கு நான்கு அல்லது எட்டுக் கைகளைக்
கற்பித்துத் தமது சிறு தெய்வங்களுக்கு இரண்டு கைகளை மட்டும் கற்பித்துச்
சிற்ப உருவங்களை அமைத்திருக்கிறார்கள். இந்த நுட்பம் இந்தச்
சமயங்களின் சிற்ப உருவங்களைக் கூர்ந்து பார்த்தால் நன்கு விளங்கும்.

     சைவ, வைணவ சிற்ப உருவங்களைப் பற்றி இன்னொரு நுட்பத்தையும்
வாசகர்கள் உணரவேண்டும். சிவன், திருமால் உருவங்களுக்கு முதன்மை
கொடுக்கும்போது அவ்வுருவங்களுக்கு நான்கு அல்லது எட்டுக் கைகளைக்
கற்பித்து, அவர்களின் சக்தியாகிய அம்மன், தேவி உருவங்களுக்கு இரண்டு
கைகளை மட்டும் கற்பிக்கிறார்கள்; ஆனால், அம்மன், தேவிகளுக்கு முதன்மை கொடுக்கும்போது அவ்வுருவங்களுக்கு
நான்கு அல்லது எட்டுக் கைகளைக் கற்பித்துச் சிற்ப உருவம்
அமைக்கிறார்கள். சிற்பக் கலையை ஆராயும் வாசகர்கள் இந்த
நுட்பத்தையும் உணரவேண்டும்.

நால்வகைப் பிரிவு

     உலோகத்தினாலும் கல்லினாலும் அமைக்கப்பட்ட சிற்ப உருவங்களைத் தெய்வ உருவங்கள் என்றும், இயற்கை உருவங்கள் என்றும், கற்பனை
உருவங்கள் என்றும், பிரதிமை உருவங்கள் என்றும் நான்கு பெரும்
பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

     தெய்வ உருவங்கள் என்பது சிவபெருமான், பார்வதி, கணபதி, முருகன்
முதலிய
  சைவ சமயத் தெய்வ உருவங்களும், திருமால், இலக்குமி,
கண்ணன், இராமன் முதலிய வைணவ சமயத் தெய்வ உருவங்களும் ஆகும்.

     இயற்கை உருவங்கள் என்பது மனிதன், மிருகம், பறவை முதலிய
இயற்கை உருவங்கள் ஆகும்.

     கற்பனை உருவங்கள் என்பது இயற்கையில் காணப்படாத,
கற்பனையாகக் கற்பித்து அமைக்கப்பட்ட உருவங்கள், இலைக்கொடிகள்,1
சரபப் பட்சி, இருதலைப் பட்சி, மகரம், கின்னரம், குக்குட சர்ப்பம், நாகர்,
பூதர் முதலியவை கற்பனை உருவங்களாகும். அன்றியும், கற்பனையாக
அமைக்கப்பட்ட இலைக்கொடி, பூக்கொடி உருவங்களுமாகும்.

     பிரதிமை உருவங்கள் என்பது ஆட்களின் உருவத்தைத் தத்ரூபமாக
அமைப்பது.

     இந்த நான்கு விதமான சிற்பங்களை நமது நாட்டுக் கோயில்களில்
காணலாம். உதாரணத்திற்காக இச்சிற்பங்களில்
சிலவற்றை இங்குக் காட்டுவோம். அவற்றையெல்லாம் விரிவாகவும்
விளக்கமாகவும் கூறுவதற்கு இது இடம் அன்று; ஆயினும், சுருக்கமாகச் சில
கூறுவோம்.

தெய்வ உருவங்கள்

     தெய்வ உருவங்களில் சைவ சமயச் சிற்ப உருவங்களைக் கூறுவோம்.
சிவபெருமானுக்கு முக்கியமாக இருபத்தைந்து மூர்த்தங்களைக் கூறுவார்கள்.
அந்த மூர்த்தங்களைக் கல்லிலும் செம்பிலும் அழகாகச் சிற்பிகள்
செய்திருக்கிறார்கள். அவையாவன:

     1. இலிங்கோத்பவ மூர்த்தம், '2. சுகாசன மூர்த்தம், 3. உமாமகேசம்,
4.
கலியாணசுந்தரம், 5. மாதொருபாகர் (அர்த்தநாரி) 6. சோமஸ்கந்தம்,
7.
சக்கரப் பிரசாதன மூர்த்தம், 8. திரிமூர்த்தி, 9. அரியர மூர்த்தம்,
10.
தக்ஷிணா மூர்த்தம், 11. பிக்ஷாடனர், 12.கங்காள மூர்த்தி,13. காலசம்மார
மூர்த்தி, 14. காமாந்தகர், 15. சலந்தர சம்மார மூர்த்தி, 16. திரிபுராந்தகர்,
17.
சரப மூர்த்தி, 18. நீலகண்டர், 19. திரிபாத மூர்த்தி,20. ஏகபாத மூர்த்தி,
21.
பைரவ மூர்த்தி,22. இடபாரூட மூர்த்தி, 23. சந்திரசேகர மூர்த்தி,
24.
நடராஜ மூர்த்தி,

     இவற்றில் தக்ஷிணாமூர்த்தி உருவத்தில் வீணாதர தக்ஷிணாமூர்த்தி
என்றும், ஞான தக்ஷிணாமூர்த்தி என்றும், யோக தக்ஷிணாமூர்த்தி என்றும்
பிரிவுகள் உள்ளன.

    நடராஜ மூர்த்தத்தில் சந்தியா தாண்டவ மூர்த்தி, காளிகா தாண்டவ
மூர்த்தி, புஜங்கத்திராச மூர்த்தி, புஜங்கலளித மூர்த்தி, ஊர்த்துவ தாண்டவ
மூர்த்திமுதலிய பிரிவுகள் உள்ளன.1
பைரவ மூர்த்தத்தில் பிக்ஷாடன பைரவர், லோக பைரவர், காள பைரவர்,
உக்கிர பைரவர் முதலிய பிரிவுகள் உள்ளன.

கொற்றவை, அம்பிகை, துர்க்கை, காளி, பைரவி முதலிய உருவங்களும்
உள்ளன.

கணபதி உருவத்தில் பால கணபதி, நிருத்த கணபதி, மகா கணபதி, வல்லபை
கணபதி முதலிய பலவகையுண்டு.

சுப்பிரமணியர் உருவத்தில், தண்டபாணி, பழனியாண்டவர் வேல்முருகர், ஆறுமுகர், மயில்வாகனர் முதலிய பல பிரிவுகள் உள்ளன.

பதஞ்சலி, வியாக்கிரபாதர், தும்புரு, நாரதர், நந்தி தேவர், நாயன்மார்கள்
முதலியவர்களின் உருவங்களும் உள்ளன.

வைணவ சமயத் திருவுருவங்களில் நாராயணன், கேசவன், மாதவன்,
கோவிந்தன், அநந்தசயனன், கண்ணன், பலராமன், இராமன், திரிவிக்ரமன்,
மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம் முதலிய பலவிதங்கள் உள்ளன.
இலக்குமி, கஜலக்குமி, பூதேவி,ஸ்ரீதேவி முதலிய உருவங்களும்,
ஆழ்வார்கள்முதலிய உருவங்களும் உள்ளன.

பௌத்த, ஜைன சிற்பங்கள்

     பௌத்த சமயத்தில் பலவிதமான புத்தர் உருவங்களும், அவலோகிதர்
உருவங்களும், தாரை முதலிய உருவங்களும் கணக்கற்றவை உள்ளன.

     ஜைன சமயத்தில் இருபத்துநான்கு தீர்த்தங்கரர் உருவங்களும், யக்ஷன் யக்ஷி, சாத்தன் முதலிய பல உருவங்களும் உள்ளன
இவ்வுருவங்களைப் பற்றிய விளக்கங்களையெல்லாம் விரிவாக இங்கு எழுதப்
புகுந்தால் இடம் பெருகும் என்று அஞ்சி நிறுத்துகிறோம். இவ்வுருவங்களைப்
பற்றித் தமிழில்  நூல்கள் இல்லாதது குறைபாடு ஆகும். ஆதரவு
கிடைக்குமானால் இந்நூலாசிரியரே இந்த மூர்த்தங்களைப் பற்றிய நூல்
எழுத இருக்கிறார்.
 
    இயற்கை உருவங்களில் ஆண், பெண் உருவங்களின் அழகிய
சிற்பங்களைப் பற்றியும், இலைக்கொடி முதலிய கற்பனைச் சிற்பங்களைப்
பற்றியும், விலங்கு, பறவை முதலிய சிற்ப உருவங்களைப் பற்றியும்
விரிவஞ்சிக் கூறாது விடுக்கின்றோம். சமயம் வாய்ப்பின் இவைகளைப் பற்றித்
தனி நூல் எழுதுவோம்.

பிரதிமை சிற்பங்கள்

     பிரதிமை உருவங்களைப் பற்றிச் சிறிது கூறிச் சிற்பக் கலைச்
செய்தியை முடிப்போம். பிரதிமை உருவங்கள்1
  என்பது, தனிப்பட்ட 
ஆட்களின் உருவ அமைப்பை, உள்ளது உள்ளவாறு அமைப்பது. இந்தக்
கலை, மேல் நாட்டு முறைப்படி நமது நாட்டில் வளரவில்லையாயினும், நமது
நாட்டு முறைப்படி ஓரளவு வளர்ந்திருந்தது.

     பிரதிமை உருவங்களில் பல்லவ அரசர் உருவங்கள் பழைமை
வாய்ந்தவை. மாமல்லபுரத்து (மகாபலிபுரம்) வராகப்பெருமாள்
குகைக்கோயிலில் இருக்கிற சிம்ம விஷ்ணுவும் அவன் மனைவியரும் ஆகிய
பிரதிமை உருவங்களும், அதே மனைவியரும் ஆகிய பிரதிமை
உருவங்களும், அதே இடத்தில்உள்ள மகேந்திரவர்மனும் அவன்
மனைவியரும் ஆகிய பிரதிமையுருவங்களும், தருமராச இரதம் என்று பெயர்
வழங்கப்படுகிற அத்யந்த காம பல்லவேசுவரக் கோயிலில் உள்ள
நரசிம்மவர்மன் பிரதிமையுருவமும், அர்ச்சுனன் இரதம் என்னும் பாறைக்
கோயிலில் உள்ள சில பல்லவ அரசர் அரசிகளின் பிரதிமை உருவங்களும்
பல்லவ அரசர்களுடையவை...                    (தொடரும்)...........


  
  


  

 

No comments:

Post a Comment